கள்ளக்குறிச்சி : மாணவி இறந்த தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியது - குழந்தைகள் நல ஆணையர்

குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி : மாணவி இறந்த தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியது - குழந்தைகள் நல ஆணையர்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி(வயது 17). பள்ளி விடுதியில் தங்கி படித்த இந்த மாணவி, கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதன் மூலமாக , மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர். மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து குழந்தைகள் நல ஆணையர் விசாரணை நடத்தப்பட்டது. குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி கூறியதாவது ;

கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது.பதிவு செய்யப்படாத விடுதியில் 24 மாணவிகளை தங்க வைத்துள்ளனர்.இது குறித்து கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம் .முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com