கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்: விசாரணை அதிகாரிகள் நியமனம்

த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்: விசாரணை அதிகாரிகள் நியமனம்
Published on: 

சென்னை,

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆபாச குறுஞ்செய்தி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ஐகோர்ட்டில் வழக்கு

இதனிடையே எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி. மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காளிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க., வக்கீல் வழக்கு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயாணன், "ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக மாவட்ட கலெக்டர் புகார் எதுவும் அளித்துள்ளாரா? ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு போலீசார் தரப்பில், "இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் உள்ளிட்ட யாரிடமும் கள்ளக்குறிச்சி கலெக்டர் புகார் அளிக்கவில்லை" என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளிவைத்தார்.

கலெக்டர் புகார்

இந்த நிலையில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜா, நேற்று இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 பிரிவுகளின் கீழ் வழக்கு

அதன்படி, பி.என்.எஸ். 75 - (ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவு) பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியில் அணுகுதல், பி.என்.எஸ். 78 - பெண்களின் விருப்பம் இல்லாமல் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தல், பி.என்.எஸ். 79 - ஆபாச செய்கை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி எச்சரிக்கை

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. மீது மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம், கலெக்டர் புகார் அளித்தது உறுதி செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் யாரையும் பாதுகாக்க முயற்சிக்க கூடாது. அவ்வாறு செய்தால் தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்து உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை அதிகாரிகள் நியமனம்

இந்நிலையில் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான வழக்கை திருப்பூர் எஸ்.பி. சிருஸ்டிசிங் விசாரிப்பார் என்றும், ஐ.ஜி.காமினி விசாரணையை கண்காணிப்பார் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான்சத்யன் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

X