மதுரை புறப்பட்ட கள்ளழகர்... எதிர்சேவை ஆற்றி வரும் பக்தர்கள்


மதுரை புறப்பட்ட கள்ளழகர்... எதிர்சேவை ஆற்றி வரும் பக்தர்கள்
x
தினத்தந்தி 11 May 2025 7:28 AM IST (Updated: 11 May 2025 10:23 AM IST)
t-max-icont-min-icon

கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா என்பது சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத விழா ஆகும். மீனாட்சி அம்மன் கோவிலில் இத்திருவிழா முதலில் தொடங்கும். பின்னர் மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள வைணவ தலமான கள்ளழகர் கோவிலில் இந்த விழா தொடங்கும்.

அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. மதுரையின் அரசியாக முடி சூட்டிய மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரரான சிவபெருமானுக்கும் கடந்த 8-ந் தேதி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. சுவாமி, அம்மனின் திருக்கல்யாணத்தை நேரில் காணாதவர்களும், ஜீவராசிகளும் தரிசிக்கும் வகையில் நேற்று முன்தினம் மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் நடந்தது. .

இதற்கிடையே கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது. இதில் அழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் எழுந்தருள்வது முத்தாய்ப்பான நிகழ்ச்சி ஆகும். இதைக்காண தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் குவிவது வழக்கம்.

தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்

சித்திரை விழா நாயகரான அழகரை வரவேற்று பக்தர்கள் ஆடிப்பாடுவது, வேண்டுதல்களை நிறைவேற்றுவது என மாமதுரையே கொண்டாடும் வகையில் இந்த விழா நடந்து வருகிறது. வைகையில் இறங்கும் வைபவத்துக்காக நேற்று மாலை 5.15 மணி அளவில் மேளதாளம் முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.

கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளர் திருக்கோலத்தில் திருக்கரங்களில் வளைத்தடிகள், நேரிக்கம்புடன், நிலைக்கண்ணாடியில் முகம் பார்த்தபடி கோவிலில் இருந்து அவர் வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

பாரம்பரிய நடனம் நடந்தது. கோவில் யானை சுந்தரவல்லி தாயார் முன்னே செல்ல கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் 18-ம்படி கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதிர்வேட்டுகள் முழங்கின. அதைதொடர்ந்து மாலை 6.15 மணி அளவில பக்தர்கள் புடைசூழ அழகர் மதுரைக்கு புறப்பட்டார். அழகரின் தங்கப்பல்லக்கில் பூக்களை தூவி பக்தர்கள் வழியனுப்பினர். வழிநெடுக உள்ள மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று இரவு கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்பட 100-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் அழகர் காட்சி தந்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் மதுரை மூன்று மாவடியில் அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டபங்களில் எழுந்தருள்கிறார். சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன.

இன்று இரவு 11.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. நள்ளிரவில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்து மதுரை கொண்டு வரப்பட்ட திருமாலையை ஏற்று அணிந்துகொண்டு, பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் காட்சி தருகிறார்.

நாளை வைகையில் இறங்குகிறார்

முத்தாய்ப்பு நிகழ்வாக நாளை (திங்கட்கிழமை) அதிகாலை. 5.45 மணிக்கு மேல், 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் அமர்ந்து கள்ளழகர் இறங்குகிறார். இந்த கண்கொள்ளா காட்சியை காண பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகிறார்கள்.

நாளை மறுநாள் தேனூர் மண்டபத்தில் சேஷவாகனத்தில் கள்ளழகர் காட்சி தருகிறார். பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் அமர்ந்து பிரசன்னமாகி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார திருக்கோலங்களில் அருள்பாலிக்கிறார். 14-ந்தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு திருவிழா நடைபெறுகிறது., 15-ந் தேதி காலையில் மதுரையில் இருந்து கள்ளர் திருக்கோலத்துடன் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.

1 More update

Next Story