

சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கட்சி நிர்வாகிகள், செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி தொடர்பான முக்கிய முடிவுகள், தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில், கொரோனா தொற்று காலத்தில் சேவை செய்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தை சீரமைக்க மாணவர்கள் தாமாகவே முன்வர வேண்டும் என தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணம், அதை தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான உண்மைகளை தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசு வாங்கியுள்ள கடன்கள் குறித்து தேர்தலுக்கு முன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் இன்றைய பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த பொதுக்குழு கூட்டம் இன்று மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.