கமல்ஹாசன் கட்சியில் உறுப்பினர் படிவம் வினியோகம்

கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் சேருவதற்கு உறுப்பினர் படிவம் வினியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
கமல்ஹாசன் கட்சியில் உறுப்பினர் படிவம் வினியோகம்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளத்தை கமல்ஹாசன் ஏற்கனவே தொடங்கியிருந்தார். இணையதளம் மூலம் 2 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்திருந்தது. கட்சியின் திருச்சி பொதுக்கூட்டம் ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு முன்பு அதிகமான உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதற்கு கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் சிவகாசியில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர் படிவங்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த உறுப்பினர் படிவங்கள் மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

படிவம் வினியோகம்

இதற்கிடையே உறுப்பினர் படிவங்கள் கட்சியில் சேர விரும்புபவர்களுக்கு நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த படிவத்தில், பெயர், பாலினம், வாட்ஸ்-அப் எண், பிறந்த தேதி, முகவரி, இ-மெயில் முகவரி, நற்பணி மன்ற அடையாள அட்டை எண், வாக்காளர் அட்டை எண் உள்பட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

கட்சி அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான அரங்கு ஒன்று பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ளது. கட்சியில் சேர விரும்புபவர்களிடம் விவரங்களை கேட்ட பின்னர் உறுப்பினர் படிவம் மற்றும் குழு உறுப்பினர் (25 நபர்கள்) படிவம் வழங்கப்படுகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கமல்ஹாசனின் ஆதரவாளர்கள் குடும்பத்தோடு வந்து ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

கமல்ஹாசன் ஆலோசனை

இதற்கிடையே உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதேபோல உயர்மட்டக்குழுவினரிடமும் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாக கமல்ஹாசன் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

மகளிர் தின பொதுக்கூட்டம் வருகிற 8-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களான ஸ்ரீபிரியா ராஜ்குமார், கமீலா நாசர் தலைமையிலும் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மகளிரணியினர் பங்கேற்றனர். மகளிர் தின பொதுக்கூட்டத்தில் பெருவாரியானவர்களை பங்கேற்கச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com