கமல்ஹாசன் கட்சி பெயர் தேர்தல் கமிஷனில் விரைவில் பதிவு

கமல்ஹாசனின் கட்சி பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
கமல்ஹாசன் கட்சி பெயர் தேர்தல் கமிஷனில் விரைவில் பதிவு
Published on

சென்னை,

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் வருகிற 21-ந் தேதி நிகழ இருக்கிறது. ராமேசுவரத்தில் உள்ள மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து விட்டு அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் மாலையில் மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அங்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் திரள்கிறார்கள். கொடி தோரணங்கள், சுவரொட்டிகள் என்று நகரையே விழாக்கோலமாக அமர்க்களப்படுத்துகின்றனர். அந்த கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவித்து கொள்கை திட்டங்களை வெளியிடுகிறார். கட்சியின் மாநில நிர்வாகிகள் பட்டியலும் அப்போது வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாகிகள் பட்டியல்

கட்சியின் தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்படுகிறார். பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ராமநாதபுரம், மதுரை, சிவகங்கையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் செல்கிறார். அப்போது பொதுமக்களை நேரில் சந்திக்கிறார். கட்சியின் கொள்கைகளையும் விளக்கி பிரசாரம் செய்கிறார்.

கட்சியின் பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஏற்கனவே கட்சி பெயர் தேர்வு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. திராவிட கட்சிகள் சாயலில் கட்சி பெயர் இருக்குமா? அல்லது தேசிய கட்சிகள் சாயலில் இருக்குமா? என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.

தேர்தல் கமிஷன்

கட்சி பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கு தேவையான பிரமான பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி தயார் செய்துள்ளனர். இந்த பத்திரத்தில் ரசிகர் மன்றத்தில் உள்ள முக்கியஸ்தர்களிடம் இருந்து கையெழுத்து வாங்கப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷனில் இந்த ஆவணங்கள் அனைத்தும் சமர்பிக்கப்பட்டு கட்சி பெயர் பதிவு செய்யப்படுகிறது.

நாளை (15-ந்தேதி) கட்சி பெயரை பதிவு செய்ய தேர்தல் கமிஷனிடம் கமல்ஹாசன் நேரம் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை கமல்ஹாசன் தரப்பில் மறுத்தனர். கட்சி பெயரை பதிவு செய்யும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றனர்.

ஆலோசனை

கட்சி பெயரை அறிவித்த பிறகு தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதா? அல்லது அதற்கு முன்பாகவே பதிவு செய்வதா என்று ரசிகர் மன்ற பொறுப்பாளர்களிடம் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com