மதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - கே.எஸ்.அழகிரி பேட்டி

மதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று ஈரோட்டில் பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
மதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - கே.எஸ்.அழகிரி பேட்டி
Published on

ஈரோடு,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வருகிற 24-ந் தேதி ஈரோடு வருகிறார். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான ஜவகர் இல்லத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இளம் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை பயணத்தை நாடு முழுவதும் தொடங்கி இருக்கிறார். 23-ந் தேதி (சனிக்கிழமை) அவர் கோவை வருகிறார். அங்கிருந்து கொங்கு மண்டல பகுதிகளில் சாலை வழி பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். அதன்படி 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணி அளவில் ஈரோடு வருகிறார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவுக்கு வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். சுயமரியாதை பிறந்த மண்ணாக விளங்கும் ஈரோட்டில் இருந்து நமது தலைவர் ராகுல்காந்தி எழுச்சிமிக்க பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்தியாவுக்கே ஈரோட்டில் இருந்து எழுச்சி ஏற்படும்.

கமல்ஹாசன் மதச்சார்பு இல்லை என்று பேசி வருகிறார். அவர் தனியாக பேசுவதை விட, ஏற்கனவே மதச்சார்பின்மை கூட்டணியாக இருக்கும் எங்கள் கூட்டணிக்கு வந்து அவர் பேச வேண்டும். எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன். எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே இலக்கு மதச்சார்பின்மைதான். ஒரே கூட்டணியில் இருப்பதால் கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டியது இல்லை. காங்கிரஸ் எப்போதும் கொள்கை விஷயத்தில் 2 நிலைப்பாடுகள் வைத்து இருப்பது இல்லை.

இதுபோல் எங்கள்கூட்டணியில் உள்ள தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் கொள்கை, எங்கள் கொள்கையில் வேறுபாடு உண்டு. ஆனால், எங்கள் அனைவருக்குமான ஒரே கொள்கை மதச்சார்பின்மை. ஆனால் பா.ஜனதா இந்தியா என்ற கட்டமைப்பை மாற்ற முயற்சிக்கிறது. 12 ஆயிரம் ஆண்டுகால இந்தியாவின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது. இதுதான் கலாசார படையெடுப்பு. வரலாற்றை மாற்றி மக்களை ஏமாற்ற பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நினைக்கின்றன. ஆனால் காங்கிரசும், கூட்டணி கட்சிகளும் வளர்ச்சிக்கு நாட்டை எடுத்துச்செல்லும்.

இவ்வாறு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com