இணையதளம் மூலமாக கமல்ஹாசன் கட்சியில் 2 லட்சம் பேர் சேர்ந்தனர்

இணையதளம் மூலமாக 2 நாட்களில் 2 லட்சம் பேர் கட்சியில் சேர்ந்தனர் என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
இணையதளம் மூலமாக கமல்ஹாசன் கட்சியில் 2 லட்சம் பேர் சேர்ந்தனர்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் 21ந்தேதி தொடங்கினார். இதையடுத்து அக்கட்சிக்கு 15 பேர் கொண்ட உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் பட்டியலையும் சமீபத்தில் அவர் வெளியிட்டார். இதில் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். இதனால் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் கட்சி தலைமை மீது கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பெருவாரியான தொண்டர்களை கட்சியில் சேர்க்கும் வகையில் கடந்த 21ந்தேதி இரவு 7.27 மணிக்கு www.maiam.com என்ற இணையதளத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். அந்த இணையதளத்தின் மூலம், 48 மணி நேரத்தில் (2 நாட்கள்) 2 லட்சத்து 1,597 பேர் கட்சி உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாகவும், 8 லட்சத்து 32 ஆயிரத்து 864 பேர் இணையதள பக்கத்தை பார்வையிட்டதாகவும், 3 லட்சத்து 5 ஆயிரத்து 541 பேர் தனித்தன்மையான பயனர் கணக்கு வைத்திருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் அறிவிப்பு எப்போது?

இதேபோல உறுப்பினர் படிவம் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் பின்னர் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது. உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் மாவட்ட வாரியாக நகரம்ஒன்றியத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளது. இணையதளம் மூலமாக மட்டும் இன்றி, வீடு, வீடாக சென்று தீவிரமாக உறுப்பினர்களை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சியில் ஏப்ரல் மாதம் 4ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற உள்ளது. கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் மற்றும் கட்சியின் உயர் மட்டக்குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்று இடம் தேர்வு செய்ய உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்தகட்ட நிர்வாகிகள் பட்டியல் எப்போது வெளியாகும்? அதில் தங்கள் பெயர் இடம் பெறுமா? என்று கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினரும், கட்சியினரும் கமல்ஹாசனின் அறிவிப்பை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com