ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டு சிதைக்க முயல்கிறார் கமல் - தமிழருவி மணியன்

ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டு கமல் சிதைக்க முயல்வதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். #TamilaruviManian
ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டு சிதைக்க முயல்கிறார் கமல் - தமிழருவி மணியன்
Published on

சென்னை,

காவிரி பிரச்சனையில் தண்ணீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து கமல்ஹாசன் மற்றும் குமாரசாமி ஆகிய இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அதில் சகோதரத்துவத்துடன் இருமாநிலங்களும் இருக்க வேண்டும் என கமல் வலியுறுத்தியுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் இரு மாநில விவசாயிகளின் நலன் கருதி முடிவு எடுக்கப்படும் என குமாரசாமி உறுதி கூறியுள்ளார். அப்போது பேசிய கமல், காலா திரைப்படம் தொடர்பாக படக்குழுவினர் கவனித்துக்கொள்வர். திரைப்படங்களை விட தண்ணீர் தான் முக்கியம். எனவே, நான் தமிழக மக்களின் சார்பாக கர்நாடக மக்களின் பிரதிநிதியை சந்தித்துள்ளேன் என கூறினார்.

இந்நிலையில், ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டு கமல் சிதைக்க முயல்வதாக தமிழருவி மணியன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் போராட்டத்திற்கு எதிரானவர் ரஜினிகாந்த் என்பதைப் போன்ற ஒரு பிம்பத்தினை கமல்ஹாசனின் அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்துவரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும், சில அமைப்புகளும், அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில், கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் நோக்கத்தை மக்கள் எளிதாக இனம்காணலாம்.

ரஜினிகாந்த், மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெறக் கூடாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில், அவருடைய தனிப்பட்ட நோக்கம் தெளிவாகவே தெரிகிறது. சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல் அடையாளம்.

சமூக வலைதளங்களிலும், சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன்பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com