

சென்னை,
நடிகர் கமல்ஹாசன் மக்கள் பிரச்சினை குறித்து தனது கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார். இதற்காக தனி கட்சி தொடங்கும் ஏற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கி உள்ளார். இந்த நிலையில், வடகிழக்கு பருவ மழை காலத்தில் வட சென்னை பகுதிக்கு வர இருக்கும் ஆபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்து இருந்தார்.
எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து எனவும், கொசஸ்தலை ஆற்றின் 1,090 ஏக்கர் கழிமுகத்தை சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம்.கொசஸ்தலை ஆற்றில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன என்றும் தெரிவித்து இருந்த கமல்ஹாசன் இது பற்றி முழு விவரங்களையும் தனது டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை கமல்ஹாசன் எண்ணூர் துறைமுகம் சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கமல்ஹாசன் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்வதாக பல்வேறு தரப்பினர் விமர்சனங்கள் முன்வைத்து வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதன்முறையாக களத்தில் இறங்கி மக்களிடம் கமல்ஹாசன் குறைகளை கேட்டறிந்துள்ளார்.