பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா
Published on

காமராஜர் பிறந்தநாள்

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக  கொண்டாடப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.

வடமதுரை கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இயக்குனர் அருள்மணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராமு வரவேற்றார். பின்னர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதேபோல் தங்கம்மாபட்டி சக்தி சாய் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் சாந்தி ஸ்ரீதரன் பரிசுகள் வழங்கினார்.

கற்களால் உருவப்படம்

பழனி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. பழனி நகராட்சி கடைவீதி பள்ளியில் காமராஜரின் உருவப்படத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதேபோல் வடமதுரை விவேகானந்தா பள்ளி மாணவர்கள் காமராஜர் பிறந்தநாளையொட்டி, சிறிய கற்களால் காமராஜரின் உருவப்படத்தை வரைந்து இருந்தனர். அது பலரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் அரசியல் கட்சியினர் சார்பிலும் காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

கன்னிவாடி

கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகரன் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஐ.பி. ரைசிங் அறக்கட்டளை தலைவர் இந்திரா துவாரநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெண் குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியமான ஒன்று. அதேபோல் விளையாட்டிலும் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்த விழாவில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, கன்னிவாடி முன்னாள் நகர தி.மு.க. செயலாளர் சண்முகம், பேரூராட்சி துணைத்தலைவர் கீதா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி செயலாளர் கோபிநாத் தலைமை தாங்கினார். அப்போது விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். இதில், பள்ளி முதல்வர் ஆத்தியப்பன், ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பெரும்பாறை அருகே கே.சி.பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜவஹர் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மோகனப்பிரியா, தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஆசிரியை முருகேஸ்வரி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com