காமராஜர் பிறந்த தினம்: ஜூலை 15-ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட உத்தரவு

முன்னாள் முதல் அமைச்சர் காமராஜர் பிறந்த நாளன்று, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
காமராஜர் பிறந்த தினம்: ஜூலை 15-ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட உத்தரவு
Published on: 

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு கல்வியாண்டில் வரும் ஜூலை 15-ம் தேதியன்று அனைத்து விதமான பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாகக் கொண்டாடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணரும் வகையில் பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கவேண்டும். இதற்கான செலவினங்களைப் பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியிலிருந்து செய்ய வேண்டும்.

இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல, அனைத்து முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் காமராஜர்படத்தை அலங்கரித்து வைத்து, கல்வி வளர்ச்சி தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனவும் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com