காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Published on

காமராஜர் பிறந்த நாள் விழா

கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மாணவ-மாணவிகள் மரியாதை செலுத்தினர். இதேபோல மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி, நடன போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மாணவிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகள் சீருடைக்கு பதிலாக பல வண்ண ஆடைகள் அணிந்து இன்று பள்ளிக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் காமராஜபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அன்னவாசல்

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலைசெந்தில் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து மாணவர்களுக்கு தமிழக கல்வி வரலாற்றில் பெருந்தலைவரின் சீரிய பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். இதில் ஆசிரியர்கள் செல்வராஜ் சின்ன கருப்பையா, ஜீரோ, கலைமகள் ஆகியோர் கல்வி வளர்ச்சி நாள் குறித்து பேசினர். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகள்

இதேபால் மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தர்மசேகர் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், அன்னவாசல் ஒன்றியபெருந்தலைவரும் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவருமான ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு காமராஜரின் வாழ்க்கை நிகழ்வுகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர். தொடர்ந்து பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

இதேபோல் புல்வயல் அரசு உயர் நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். இதனையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் தலைமையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மணமேல்குடி

மணமேல்குடி அடுத்த வேட்டணிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் வரவேற்றார். தண்டலை ஊராட்சி மன்ற தலைவர் அல்லிராணி விஜயன் கலந்து கொண்டு காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசினார். பின்னர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாதுரை மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவி பாண்டியம்மாள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இடைநிலை ஆசிரியர் கலைமணி நன்றி கூறினார்.

ஆலங்குடி

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு, கட்டுரை, பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக ஆலங்குடி பஸ் நிறுத்தம், அரசமரம் பஸ் நிறுத்தம், வடகாடு முக்கம், பழைய நீதிமன்ற வளாகம் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com