காமராஜர் பல்கலைக்கழகம்: நிர்வாக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நாளை மறுநாள் பரிசீலனை

பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட நிர்வாக பணியிடங்களுக்கான விண்ணப்ப பரிசீலனை நாளைமறுநாள் நடக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பிற நிர்வாக பணியிடங்களான பதிவாளர், தேர்வாணையர், தொலைநிலைக்கல்வி இயக்குனர், கூடுதல் தேர்வாணையர் மற்றும் கல்லூரி வளர்ச்சிக்குழும டீன் ஆகிய பணியிடங்கள் கடந்த 3 வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ளன.

இந்த பணியிடங்களில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து, இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிசம்பர் மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் டிசம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு பின்னர் காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

பணியிடங்களுக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கான குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

பின்னர் தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், தமிழக கல்லூரி கல்வி கமிஷனருமான சுந்தரவள்ளி பரிசீலனைக்குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவினர் விண்ணப்பங்களை சரி பார்த்து வந்த நிலையில், குழுவின் உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதனால் விண்ணப்பங்கள் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜினாமா செய்தவருக்கு பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நாளைமறுநாள்(25-ந் தேதி) விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பரிசீலனைக்கு பின்னர் தகுதியான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளரிடம் சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com