

திருச்சி,
காவிரிக்கரையில் அமைந்த திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, திருச்சி மாநகரில் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலக கட்டிடம் ரூ.235 கோடியில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் ரூ.50 கோடியிலும், தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.5 கோடியிலும் என்று மொத்தம் ரூ.290 கோடியில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ளது. தற்போது இந்த நூலகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திருச்சியில் உலகத்தரத்துடன் ரூ.290 கோடியில் காமராஜர் நூலகம், அறிவுசார் மையம் தரைத்தளத்துடன் சேர்த்து 8 தளங்களுடன் அமையும் இந்த நூலகத்தில் பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற உள்ளன. இதன் தரைத்தளத்தில் வரவேற்பறை, தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி, பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை, சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, பருவ இதழ்கள், பத்திரிகைகள் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி மற்றும் 1,000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மேலும் முதல் தளத்தில் அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் பாடப்புத்தகங்கள் பகுதியும், இரண்டாம் தளத்தில் கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடமும், மூன்றாம் தளத்தில் தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம் - படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதியும் அமைய உள்ளன.
நான்காம் தளத்தில் ரோபாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, இணைய (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் உறுப்பினர்க ளுக்கு வழங்கும் பகுதியும், ஐந்தாம் தளத்தில் அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதியும், ஆறாம் தளத்தில் நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி, டிஜிட்டல் மயமாக்கல் பகுதி, டிஜிட் டல் ஸ்டுடியோ, போட்டித் தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடமும், ஏழாம் தளத்தில் காணொலி (வீடியோ கான்பரன்சிங்) காட்சியரங்கம், தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, நிர்வாகப் பகுதியும் அமைக்கப்பட உள்ளன.
இதுதவிர நகரும் படிக்கட்டுகள், 2 கண்ணாடி மின்தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள், மின்மாற்றிகள், சூரிய மின்களங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. இந்நூலகத்தில், உலகத்தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணம், கலை, கவிதை, நாடக நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், அரிய நூல்கள், மருத்துவம், பொறியியல், இசை, விளையாட்டு, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த நூல்கள், போட்டித்தேர்வு மாணவர்களுக்கான நூல்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுமார் 75 சதவீதம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. ஓரிரு மாதங்களில் திறப்பு விழா காணும் வகைளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த முன்னேற்றத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நூலகம் பயன்பாட்டுக்கு வந்தால் திருச்சியின் மற்றொரு அடையாளமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.