காமராஜர் பிறந்தநாள் விழா... போட்டிகளில் வென்ற 48 பேருக்கு அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டு

“கல்வியைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் இணையவழியில் பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டன.
காமராஜர் பிறந்தநாள் விழா... போட்டிகளில் வென்ற 48 பேருக்கு அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டு
Published on

சென்னை,

காமராஜர் பிறந்தநாள் விழாயையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற 48 பேருக்கு அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (21.09.2026) சென்னை கலைவாணர் அரங்கில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட“கல்வியைக் கொண்டாடுவோம்” சிறப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற 48 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவு, அரசின் தகவல்களை பொதுமக்களிடம் விரைவாகவும் பயனுள்ளதாகவும் கொண்டு சேர்க்கும் முக்கியமான டிஜிட்டல் தகவல் தொடர்பு அமைப்பாக செயல்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், கொள்கை முடிவுகள், மக்கள நல அறிவிப்புகள் மற்றும் தொடர்பான முக்கிய அரசு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பல்வேறு சமூக ஊடகத் தளங்களின் வாயிலாக பொதுமக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதில் இப்பிரிவு முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் இணையதளம் வழியாக பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது.

கல்வியைக் கொண்டாடுவோம்

அதன் அடிப்படையில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களின் சிந்தனைத்திறன், படைப்பாற்றல் மற்றும் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவு சார்பில் “கல்வியைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் இணையவழியில் பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டன.

பாராட்டு

வினாடி-வினா, இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, காட்சிப் பலகை, ஓவியம், புகைப்படம், AI Prompt உருவாக்கம், தனித்திறமை, குறும்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிருந்து 9,417 நபர்கள் பங்கேற்ற நிலையில், தேர்வுக்குழுவினரால் சிறந்த படைப்புகள் மற்றும் திறமைகள் தேர்வு செய்யப்பட்டு 48 நபர்கள் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்பட்டனர். மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

முன்னெடுப்பு

அமைச்சர் பேசுகையில், பெருந்தலைவர் காமராஜர் கல்விக்காக ஆற்றிய மகத்தான பணிகளை நினைவுகூர்ந்து, இளம் தலைமுறையினரின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், கல்வி, படைப்பாற்றல் மற்றும் புதுமை சிந்தனையை வளர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) முனைவர் ஆர். பாஸ்கரன், செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்கள், சமூக ஊடக பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com