காஞ்சீபுரம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் ரூ.3¾ கோடி முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் கைது

காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களின் வைப்புநிதி முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் ரூ.3¾ கோடி முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் கைது
Published on

முறைகேடு

காஞ்சீபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 4 துறைகளில் சுமார் 1000 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகள் தனித்தனியே தங்கி படிப்பதற்கு விடுதி வசதிகளும் உள்ளன.

கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் விடுதியில் தங்கி படிப்பவர்களிடம் இருந்து எச்சரிக்கை வைப்பு நிதியாக பெறப்படும் தொகை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும். மாணவ, மாணவிகள் 4 வருட பட்டப்படிப்பை முடித்தபிறகு அந்த பணம் மீண்டும் திருப்பி தரப்படும். இந்த கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த அலுவலக உதவியாளர் பிரபு மாணவ, மாணவியர்களிடம் பெற்ற பணத்தை வங்கி கணக்கில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவ, மாணவிகள் தொடர் புகார் தெரிவித்ததை தொடர்ந்து கல்லூரி முதல்வர் கவிதா, வங்கி கிளைக்கு சென்று விசாரித்தபோது வங்கி கணக்கில் ரூ.401 மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோல் பிற வங்கி கணக்குகளையும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவற்றையும் விசாரிக்க தொடங்கி உள்ளனர். இதில் கல்லூரிக்கு சொந்தமாக உள்ள 9 வங்கி கணக்குகள் மற்றும் 7 நிரந்தர வைப்பு வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொண்ட போது அவற்றிலும் ரூ.3 கோடி 80 லட்சம் முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளது.

கைது

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கவிதா காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபுவை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த பிரபு தலைமறைவானார். இந்த நிலையில் பிரபு ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆந்திரா சென்ற போலீசார் நேற்று முன்தினம் இரவு பிரபுவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com