காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
Published on

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி உடல்நலக்குறைவால் திடீரென்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரை இழந்து வாடும் அவருடைய விசுவாசிகளுக்கும், காஞ்சி சங்கரமடத்தின் பணியாளர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

ஜெயேந்திரர் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை சேவை நோக்கத்துடன் நடத்தி வந்தார். அயோத்தி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக தீவிரமான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். ஜெயேந்திரரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மனவருத்தம் அடைந்தேன். அவரை பிரிந்து வாடும் காஞ்சி மடத்தின் நிர்வாகிகளுக்கும், அவரை அன்றாடம் சந்தித்து ஆசிபெறும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இல.கணேசன் எம்.பி.: மடாதிபதியாக இருந்து காலத்தின் தேவையை உணர்ந்து சமுதாய முன்னேற்றத்திற்கான சேவையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி. அவர் சித்தி அடைந்தார் என்ற செய்தி இந்து சமுதாயத்துக்கு மட்டும் இன்றி, அனைத்து தரப்பினருக்கும் பேரிழப்பு.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இந்து மதம் அனைவருக்கும் சமமானது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் கடுமையான விமர்சனத்துக்கு மத்தியிலும் தூய உள்ளத்தோடு கடுமையாக உழைத்தவர். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அவருடைய மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: ஜெயேந்திரர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து மதத்தின் கொள்கை கோட்பாடுகளை காக்கவும், பரப்புவதற்கும், அதன் வளர்ச்சிக்காகவும் தொய்வின்றி பாடுபட்டு வந்தவர். அவரது மறைவு ஆன்மிக உலகுக்கு பேரிழப்பாகும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: காஞ்சி சங்கராச்சாரியார் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவருடைய மறைவால் வாடும் சங்கர மடத்தினருக்கும், அவர் மீது மதிப்பும், நம்பிக்கையும் கொண்ட இந்துக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திரர் காலமான செய்தி வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஆன்மிக பணிகள் மட்டும் இன்றி கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த பணிகளும் அவருடைய காலத்தில் மேற்கொள்ளப்பட்டது பெருமைக்குரியது ஆகும்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: காஞ்சி சங்கரமடத்து மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அவருடனும், அவரது மடத்துடனும் திராவிடர் கழகத்துக்கு மலையளவு கருத்து கொள்கை வேறுபாடுகள் இருப்பினும், திராவிடர் கழகம் அவரது மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: ஆன்மிகம், கல்வி, சமூக சேவை உள்ளிட்ட பணிகளை மிகச்சிறப்பாக சங்கர மடத்தின் மூலம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி செய்து வந்தது பாராட்டுக்குரியது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறை அருளை வேண்டுகிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி முக்தி அடைந்தார் என்பது வருத்தம் அளிக்கிறது. அவருடைய அருள் நமக்கு என்றும் இருக்கும் என்று எண்ணி, அவரை அனைவரும் பக்தி மலர்களை தூவி வணங்குவோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்:

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும், துக்கத்தையும் அளிக்கிறது. ஆன்மிக தத்துவங்களை மக்கள் நடைமுறைப்படுத்த வழிகாட்டி வந்தவர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நடத்திய சமூக ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவு அளித்தவர். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்: காஞ்சி சங்கராச்சாரியார் மறைவு அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரிய இழப்பு ஆகும். அவருடைய இழப்பால் துயருற்று நிற்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஞ்சீபுரம் சங்கரமடத்தின் பீடாதிபதியான சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சரஸ்வதி காலமாகிவிட்டார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து: காஞ்சி ஜெயேந்திரர் மறைவு எதிர்பாராதது, இதயத்தை வருந்தச் செய்வது. அவரை இழந்து வாடும் அன்பர்கள் அனைவருக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்:

காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக எழுந்தருளி ஆன்மிக பேரொளியை கொடுத்து வந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி மகாசமாதி அடைந்துவிட்டார். ஆன்மிக பணியின் மூலம் எல்லா சமுதாயத்தினரின் அன்பையும், மதிப்பையும் பெற்று உலக அளவில் போற்றப்பட்டவராக திகழ்ந்தார். அவரது இழப்பு ஆன்மிக உலகிலும், பாரத தேசத்திற்கும் பேரிழப்பாகும்.

இதேபோல ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன், முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெயேந்திரரின் உடலுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன், காஞ்சி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் டாக்டர் வி.வி.குமாரகிருஷ்ணன், கல்லூரி செயலாளர் டாக்டர் வி.பி.ரிஷிகேசன், கல்லூரி முதல்வர் டாக்டர் கே.ஆர்.வெங்கடேசன், காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், கலவை சச்சிதானந்தா சுவாமிகள், ரத்தினகிரி முருகன் அடிமை சுவாமிகள் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயேந்திரரின் உடலுக்கு, அகில இந்திய ஹஜ் கமிட்டி முன்னாள் துணைத்தலைவர் அபூபக்கர் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com