

காஞ்சிபுரம்,
தாத்தா, பாட்டியுடன் இருந்த 8 வயது சிறுமி திடீரென மாயமாகியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கல்பனா. அவர் கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா தனது பெற்றோர் மற்றும் மகளுடன் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கருமாங்கழனி பகுதிக்கு குடியேறினார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கல்பனா பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு துர்கா பூஜை நடைபெற்று கொண்டிருப்பதாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றார். அப்போது, சிறுமி காஞ்சிபுரத்தில் தனது தாத்தா, பாட்டியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் சிறுமி 3 நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைக்கு தனியாக சென்றார். அப்போது அங்கிருந்து திடீரென மாயமானார். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர்,இது குறித்து ஸ்ரீ திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். தாத்தா பாட்டியுடன் வசித்து வந்த வடமாநில சிறுமி மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.