காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருக்கு கொரோனா தொற்று

காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருக்கு கொரோனா தொற்று
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டவர் வி.சோமசுந்தரம், இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். இவருக்கு தேனரசி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சோமசுந்தரம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க தொண்டர்கள் ஏராளமானோர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தை அடுத்த வேதாச்சலம் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்து வந்தனர்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நேற்று காஞ்சீபுரம் வருகை தந்தார். இதற்கான அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது ஏராளமான அ.தி.மு.க.வினர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சோமசுந்தரத்திற்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. அவர் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது கார் டிரைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com