காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது : பேக்கரி மோதல் வழக்கில் கோர்ட் அதிரடி

வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்த கோர்ட்டு கைது செய்ய உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது : பேக்கரி மோதல் வழக்கில் கோர்ட் அதிரடி
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா பூசிவாக்கம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பொருட்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.வாய் தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியர்கள் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகனின் புகாரின் பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

பேக்கரி கடை உரிமையாளர் சிவா அளித்த புகாரின் பேரில், முருகன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் பேக்கரி உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படாமல் இருந்தனர்.இதுகுறித்து முருகன் தரப்பினர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ள தவறியதாக நேற்று காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேசுக்கு நீதிபதி ப.உ.செம்மல் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் நேற்று மாலை 5 மணிக்குள் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாவிட்டால் டி.எஸ்.பி. கணேஷ் சங்கரை சிறையில் அடைக்க உத்தரவிடப்போவதாக எச்சரித்தார்.இந்த நிலையில் மாலை 5 மணி வரையில் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்யாததால், நீதிமன்றத்தில் சீருடையில் காத்திருந்த டி.எஸ்.பி.சங்கர் கணேசை காஞ்சீபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியின் காரிலேயே வழக்கில் ஆஜராக வந்த டி.எஸ்.பி.சங்கர் கணேசை காஞ்சீபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க அழைத்து வந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டி.எஸ்.பி. சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்பதை அறிந்து காஞ்சீபுரத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீசார் கிளை சிறை சாலை அருகே குவிந்தனர். டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறைக்குச் அழைத்து செல்ல அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் அவரது அலுவலகத்திற்கு சென்று வர ஜீப்பில் ஏறி சென்றார். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக வதந்தி பரவியது. இதுகுறித்து அறிந்த டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் உடனடியாக கிளை சிறைச்சாலை வளாகத்திற்கு வந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து அறிந்து ஏராளமான போலீசாரும், வக்கீல்களும் கிளை சிறைச்சாலை அருகில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் அழைத்து செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com