காஞ்சிபுரம்: உயர் அழுத்த மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி மரணம்

மின்சார அதிர்வில் தூக்கி வீசப்பட்ட வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன் மரணம்
கன்னியப்பன்
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி மரணம்.

கட்டுமான பணிகள்

காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதியான இந்திரா நகர், ஜி.எஸ்.ஆர் அவென்யூவில் புதிய வீடு ஒன்றின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.​ தற்போது வீட்டின் இரண்டாவது மாடி கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

வெல்டிங் தொழிலாளி

இதற்காக, மாடித் தடுப்புகள் அமைக்கும் பணிக்குத் தேவையான இரும்புச் கம்பிகளை கீழிருந்து மேலே ஏற்றும் பணியில், உக்கல் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன் மற்றும் இதர தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மரணம்

பணியின் போது, இரும்பு கம்பிகளை கீழிருந்து மேல் நோக்கி உயர்த்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அருகில் சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது இரும்பு ராடு உரசியது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் இரும்பு கம்பி வழியாக பயங்கர வேகத்தில் மின்சாரம் பாய்ந்தது. மின்சார அதிர்வில் தூக்கி வீசப்பட்ட வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்மாற்றி வெடித்தது

இதற்கிடையே, மின்சாரம் தாக்கிய அதிர்வில் அருகில் இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென பழுதடைந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியே அதிரும் வகையில் சத்தம் கேட்டது. புகை மண்டலத்துடன் மின்மாற்றி வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்தபடி ஓடிவந்தனர். அங்கு கன்னியப்பன் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com