

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சி வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஷாம்ஷியா (வயது 26). இவரது கணவர் ஆசிப். இவர்களுடைய மகள் ஆசிபா(10), மகன் அப்சர்(5). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆசிப் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டார். கணவரை இழந்த நிலையில் 2 குழந்தைகளுடன் ஷாம்ஷியா வசித்து வந்தார்.
ஷாம்ஷியா அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை செய்து மகன் மற்றும் மகளை காப்பாற்றி வந்தார். அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாம்ஷியா தனது குழந்தைகளுடன் சென்னை கொளத்தூரில் சென்று தங்கினார். ஆசிபா 5-ம் வகுப்பும், அப்சர் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி குழந்தைகளுடன் சென்ற ஷாம்ஷியா அங்கு செல்லவில்லை.
நேற்று காலை மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள விவசாய கிணற்றில் 3 பேரின் உடல்கள் மிதப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மணிமங்கலம் போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்கள் ஷாம்ஷியா, ஆசிபா, அப்சர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் ஷாம்ஷியா எழுதி வைத்த கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்ய போவதாக எழுதியிருந்நததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாம்ஷியா குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதற்கு கடன் தொல்லைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.