

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 8 மணி நேரமாக நீடித்த மின்தடையால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) திடீரென மின்தடை ஏற்பட்டது. இந்த 8 மணி நேர மின்தடை காரணமாக ஒட்டுமொத்த ஆஸ்பத்திரி செயல்பாடுகளும் முடங்கின. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆஸ்பத்திரியின் சிறுநீரகப் பிரிவில் வழக்கம்போல் காலை முதலே டயாலிசிஸ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் திடீரென மின் விநியோகம் தடைப்பட்டதால், டயாலிசிஸ் எந்திரங்கள் அனைத்தும் இயங்காமல் நின்றன.
இதனால் பல நோயாளிகளுக்கு சிகிச்சை பாதியிலேயே நிறுத்தப்பட்டதுடன், புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழலும் உருவானது. சுமார் 8 முதல் 9 மணி நேரமாக நோயாளிகள் அனைவரும் எந்திரங்களின் அருகிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
காலை 7:30 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், நீண்ட நேரமாகியும் வராததால் வார்டுகளில் இருந்த நோயாளிகள் புழுக்கத்தினால் கடும் அவதி அடைந்தனர். அவசர கால மின் தேவைக்கான மாற்று ஏற்பாடுகளோ அல்லது ஜெனரேட்டர் வசதிகளோ முறையாகச் செயல்படவில்லை என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகார்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இப்பகுதியில் நிலவி வரும் தொடர் மின்தடை சிக்கல்களுக்கு மின்சார வாரியமும், ஆஸ்பத்திரி நிர்வாகமும் உடனடியாகப் பொறுப்பேற்று நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.