

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி சுங்கச்சாவடியில் தடையற்ற தானியங்கி கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை பிரிவில் அமைந்துள்ள நெமிலி சுங்கச்சாவடியில் தடையற்ற தானியங்கி கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறை நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ், சுங்கச்சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தும் தடுப்புக் கட்டைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இதற்குப் பதிலாக, அதிநவீன தானியங்கி எண் பலகை அடையாளம் காணும் கேமராக்கள் மற்றும் பாஸ்டேக் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது வேகத்தைக் குறைக்கவோ அல்லது வரிசையில் காத்திருக்கவோ வேண்டிய அவசியமில்லை. சாலைக்கு மேலே பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் வாகனத்தின் எண் பலகை மற்றும் பாஸ்டேக் ஸ்டிக்கரைத் துல்லியமாக ஸ்கேன் செய்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக் கட்டணத்தை தானாகவே பிடித்தம் செய்து கொள்ளும்.
கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி தமிழகத்தின் முதல் தடையற்ற சுங்கச்சாவடியாக பரனூர் மாற்றப்பட்ட நிலையில், நெமிலி சுங்கச்சாவடி தமிழகத்தின் 2-வது தடையற்ற சுங்கச்சாவடியாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, எரிபொருள் விரயம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடும் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.