காஞ்சீபுரம்: நாய் கடித்து 3 மாதங்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் தாக்கி மாணவன் உயிரிழப்பு

நாய் கடித்ததை தந்தையிடம் தெரிவித்தால் திட்டுவார் என்று பயந்து இதுபற்றி கூறாமல் மறைத்துள்ளார்
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் சபரிவாசன் (வயது 15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு சபரிவாசன் வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் இருந்த வெறிநாய் ஒன்று அவரை கடித்துள்ளது. இதில் சபரிவாசனுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், நாய் கடித்ததை தந்தையிடம் தெரிவித்தால் திட்டுவார் என்று பயந்து இதுபற்றி கூறாமல் மறைத்துள்ளார்.
மேலும் தனது பாட்டியிடம் தெரிவித்தபோது ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை பெறாமல் நாய் கடித்த இடத்தில் பச்சிலை மூலிகையை கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் சபரிவாசனின் உடல்நிலை மோசமாகியுள்ளது. மேலும் அவரது நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சபரிவாசனை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபரிவாசன் பரிதாபமாக இறந்தார். நாய் கடித்து 3 மாதத்திற்கு பிறகு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






