காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் சிலையை வெளியே எடுத்தனர்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலையை வெளியே எடுத்தனர். 1-ந் தேதி முதல் அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்கலாம்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் சிலையை வெளியே எடுத்தனர்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு இருக்கும் அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைப்பார்கள்.

இதற்கு முன் கடைசியாக கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. அப்போது அத்திவரதர் பக்தர்களுக்கு 48 நாட்கள் காட்சி அளித்தார்.

வெளியே எடுத்தனர்

இந்தநிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜூலை 1-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க இருக்கிறார்.

இதற்காக நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பக்தி கோஷமிட்டபடி அனந்தசரஸ் குளத்தில் மணல் மூட்டைகளின் மேல் விரிக்கப்பட்டுள்ள பச்சை கம்பளத்தின் மேல் நடந்து சென்று, தண்ணீரில் இருந்து அத்திவரதரை வெளியே எடுத்து வந்தனர்.

1-ந் தேதி முதல் தரிசனம்

அத்திவரதருக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு திருநாமம் எப்படி வைத்தார்களோ, அப்படியே இருந்தது. பட்டு வஸ்திரமும் அப்படியே இருந்தது. மேலும் அத்திவரதரை எடுக்கும்போது கோவில் குளத்தின் சேற்றில் சந்தன நறுமணம் வீசியது. இந்த சேற்றை அர்ச்சகர்கள் உடலில் பூசிக் கொண்டனர். வெளியே எடுத்து வந்த அத்திவரதர் சிலையை கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் வைத்தனர்.

வருகிற 1-ந் தேதி முதல் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். அத்திவரதர் 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய இருக்கிறார்கள். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்சண்முகம், ராஜாங்கம், ரஜினிகாந்த், வெற்றிச்செல்வன் ஆகியோர் நேற்று காலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

அத்திவரதர் விழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com