

கோவில்பட்டி, (கிழக்கு):
கோவில்பட்டியில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவில் 128 ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை கனிமாழி எம்.பி. வழங்கினார்.
கருணாநிதி நூற்றாண்டு விழா
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்த ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண்களுக்கு தையல் எந்திரம்
இவ்விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 128 ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில்,
தி.மு.க. ஆட்சி என்பது பெண்களின் முன்னேற்றத்தை மைய கருத்தாக கொண்டு தான் நடத்தப்படும். அதனால் தான் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பெண்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக அரசு வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை உருவாக்கி தந்தார். இதனை தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 சதவீதமாக உயர்த்தி தந்துள்ளார்.
பா.ஜ.க.வினர் பெண்களை மதிக்கிறோம் என்கின்றனர். ஆனால், மணிப்பூரில் பெண்களை எப்படி கொடுமைப்படுத்துகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்கள் எத்தனை வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
மணிப்பூர், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பிரச்சினைகளால் மக்கள் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அவலம், பெண்கள் அங்கு தங்களது குழந்தைகளுடன் பாதுகாப்பே இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இவையெல்லாம் தான் மதத்தை வைத்து அரசியல் நடத்தும்போது வரக்கூடிய அபாயம். அதில் முதலில் பாதிக்கப்படுவது பெண்களை தான்.
இங்குள்ள பெண்கள் முன்னேற வேண்டுமென்றால் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக, பாதுகாப்பு தரக்கூடிய இடமாக இருக்க வேண்டும். இதனை தரக்கூடிய ஒரே ஆட்சி தி.மு.க. தான். இங்குள்ள அனைவருக்கும் தி.மு.க. தான் பாதுகாப்பு அரணாக இருக்கும்' என்றார்.
விழாவில், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.