

தூத்துக்குடி,
தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தை முடித்துவிட்டு கனிமொழி எம்.பி. தனது காரில் தூத்துக்குடி நோக்கி புறப்பட்டார். அவருடன் காரில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இருந்தனர்.
அவர்கள் சென்ற கார் விளாத்திகுளம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் காரை மறித்து நிறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் காரின் பின்புறப் பெட்டியை (டிக்கி) திறந்து சோதனையிட்டனர். மேலும் வாகனத்திற்குரிய ஆவணங்களையும் வாங்கி சரிபார்த்தனர்.
முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சர் இருந்த காரைத் தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் சிக்காததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த காரை செல்ல அனுமதித்தனர்.