மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகாந்த் செந்தில் எம்.பி.யை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி

சசிகாந்த் செந்தில் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ. 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். திருவள்ளூர் கலெக்டர் அலுவகக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
உண்ணாவிரதத்தின்போதுபோது சசிகாந்த் செந்திலுக்கு நேற்று முன் தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையிலும் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகாந்த் செந்தில் எம்.பி.யை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.






