21 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 கிலோ கஞ்சா பறிமுதல்
Published on

நாகையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகூர் ஜடையினா ஹாஜியார் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

கஞ்சா விற்பனை

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நாகூர் ஜடையினா ஹாஜியார் தெருவை சேர்ந்த ஜெய்னுல் உசேன் மகன் முகமது இத்ரீஸ் (வயது29), நாகை செருதூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளியப்பன் மகன் கண்ணன் (27), திருச்சி கிருஷ்புரத்தை சேர்ந்த ஜலீல் மகன் சமீர் (19), திருச்சி மகாலட்சுமி நகரை சேர்ந்த ஷேக்தாவூது மகன் ஹஜ்புதீன் (21), திருச்சி துறையூர் பழைய பஜார் பகுதியை சேர்ந்த ஷபீக் மகன் முகமது சைபு (19) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

5 பேர் கைது

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இத்ரீஸ், கண்ணன், சமீர், ஹஜ்புதீன், முகமது சைபு ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்தது 10 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com