

சென்னை,
2000-ஆம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டகஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமார், கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி, சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். 108 நாட்கள் பிணைக் கைதியாக ராஜ்குமார் வைக்கப்பட்டிருந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாறன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் உள்பட 14 பேர் மீது தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் 2004 அக்டோபரில் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர்.
மீதமுள்ளவர்கள் மீதான வழக்கு கோபிசெட்டிப்பாளையம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணையில் இருந்தபோது, மல்லு என்பவர் இறந்து போனார். ரமேஷ் என்பவர் தலைமறைவானார்.
மீதமிருந்த கோவிந்த ராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டி ராமன், மாறன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர் மீதான வழக்கை விசாரித்த கோபி நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து 2018-ல் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.