மலைவாழ் மக்களுக்கு மின்னணு நலவாரிய அட்டைகள்: கன்னியாகுமரி கலெக்டர் வழங்கினார்

கன்னியாகுமரியில் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன், முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன், முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் சந்தித்து, கலந்துரையாடியபோது கூறியதாவது:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் நலத்திட்ட உதவிகளும் கடைகோடி மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன், முத்தன்கரை வன கிராம மக்களை நேரில் சந்தித்து, வனவுரிமைச் சட்டத்தின் கீழ் தனி உரிமை பட்டா வழங்குவது தொடர்பாக பழங்குடியின மக்களால் அளிக்கப்பட்ட முறையீடுகளை ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பணிகளை துரிதப்படுத்தி முறையீடுகளை ஆய்வு செய்து கிராம சபா தீர்மானம் நிறைவேற்றி கோட்ட அளவிலான குழுவிற்கு அறிக்கையினை விரைவில் சமர்ப்பித்திட கிரா சபா நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அப்பகுதி மக்களிடம் மின் இணைப்பு, குடிநீர், சாலை வசதி, குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு குறித்த கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகளை சரி செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டைகள் 27 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இம்மின்னணு பழங்குடியின நல வாரிய அட்டை மூலம் விபத்து காப்பீடு, இயற்கை மரணத் தொகை, ஈமச் சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 8 வகையான நலத்திட்ட உதவிகளை மின்னனு இ-போர்ட்டல் மூலம் இ சேவை மையத்தில் தரவுகளை உள்ளீடு செய்து பழங்குடியின நல வாரிய அட்டைதாரரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, விளவங்கோடு வட்டாட்சியர் வயலாபாய், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் திருவாழி, கடையால் செயல் அலுவலர், வன சரகர்கள், வனத்துறை அலுவலர்கள், வன உரிமைச் சட்ட கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






