கன்னியாகுமரி: மது குடிக்க பணம் தராததால் தாய் கொலை- மகன் கைது

தொடர்ந்து அக்குடியிருப்புப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தங்கலீலாவின் மகனான ஷெபின் என்ற சிபி (வயது 37) அங்கு வந்து சென்றது தெரியவந்தது.
மது குடிக்க பணம் தராததால் தாய் கொலை.
ஜாஸ்மின் ஷீபா வீடு- ஷெபின் என்ற சிபி
Published on: 

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், பெற்ற தாயை தலையணையால் முகத்தை அமுக்கி படுகொலை செய்த மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மர்ம மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கடமலைக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் தங்கலீலா (வயது 67). இவரது கணவர் சுந்தரதாஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தங்கலீலா, திங்கள்நகர் நடுத்தேரி பகுதியில் உள்ள தனது மகள் ஜாஸ்மின் ஷீபாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவில் ஜாஸ்மின் ஷீபா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய போது, தாய் தங்கலீலா கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அங்கு கிடந்த தலையணையில் ரத்தக்கறை இருந்ததால் சந்தேகமடைந்து இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

போலீஸ் விசாரணை -சிசிடிவி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தங்கலீலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அக்குடியிருப்புப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தங்கலீலாவின் மகனான ஷெபின் என்ற சிபி (வயது 37) அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

காவல்துறை விசாரணையில் ஷெபின் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்:-

"எனக்கு கடுமையான மதுப்பழக்கம் உள்ளது. இதனால் கடந்த 6 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறேன். அடிக்கடி எனது தாயிடம் மது குடிக்க பணம் கேட்பது வழக்கம். நேற்று இரவு குடிபோதையில் எனது தங்கை வீட்டிற்கு சென்று தாயிடம் மது குடிக்கப் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் தர மறுத்து, எனது குடிப்பழக்கத்தைக் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கட்டிலில் தள்ளி, கழுத்தை நெரித்ததோடு, அருகில் இருந்த தலையணையை எடுத்து முகத்தில் அமுக்கிக் கொலை செய்தேன்" என ஒப்புக்கொண்டார்.

கைது- சிறையில் அடைப்பு

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஷெபினை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மதுபோதையால் பெற்ற தாயையே மகன் கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com