காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவில் லிங்கத்தின்மேல் சூரியஒளி விழுந்த அபூர்வ நிகழ்வு

காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவில் லிங்கத்தின்மேல் சூரியஒளி விழுந்த அபூர்வ காட்சி நேற்று நிகழ்ந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.
காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவில் லிங்கத்தின்மேல் சூரியஒளி விழுந்த அபூர்வ நிகழ்வு
Published on

பசுபதீஸ்வரர் கோவில்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி சவுந்தரவல்லி தாயார் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஆண்டுக்கு 2 முறை கோவில் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரியன் தனது கதிர்களை பாய்ச்சி வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும்.

தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் ஒரு முறையும், பின்னர் 4 மாதங்கள் இடைவெளி விட்டு ஆவணி மாதத்தில் ஒரு முறையும் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரிய கதிர்கள் படும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 5 நாட்கள் ஒவ்வொரு முறையும் சூரிய கதிர்கள் லிங்கத் திருமேனி மீது படும்.

லிங்கத்தின்மேல் சூரியஒளி

இந்த ஆண்டு சித்திரை மாத சூரிய வழிபாடு நடைபெற்ற முடிந்த நிலையில் ஆவணி மாத சூரிய வழிபாடு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 18-ந் தேதி லேசாக சூரிய கதிர்கள் திருமேனி மீதுபட்டது. அடுத்த இரண்டு நாட்கள் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய வழிபாடு நடைபெறவில்லை. இன்று காலை 6 மணி 5 நிமிடத்திற்கு சூரிய பகவான் தனது ஆயிரம் கரங்களை நீட்டி காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் பாதங்களை சரணாகதி அடைந்த நிகழ்வு நடந்தேறியது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சிறிது சிறிதாக லிங்கத் திருமேனி மீது முழுவதும் சூரிய கதிர்கள் படர்ந்து லிங்க திருமேனி தங்கத்தை உருக்கி ஊத்தியது போல் தகதகவென மின்னியது.

இந்த காட்சியை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர். பின்னர் சூரிய பகவானுக்கும் பசுபதீஸ்வரர் சவுந்தரநாயகி தாயார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்த அதிசய நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com