‘கட்சியில் மாற்றம் ஏற்பட்டால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆவேன்’ கராத்தே தியாகராஜன் பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாற்றம் ஏற்பட்டால் மாநிலத் தலைவர் ஆவேன் என்று கராத்தே தியாகராஜன் கூறினார்.
‘கட்சியில் மாற்றம் ஏற்பட்டால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆவேன்’ கராத்தே தியாகராஜன் பேட்டி
Published on

சென்னை,

சிவாஜிகணேசனின் 17-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜிகணேசன் சிலைக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவாஜியை ராசி இல்லாதவர் என்கிறார்கள். தோற்கிற ஜானகி அம்மாள் கூட்டணியில் ராஜசேகரனும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் தான் சேர்த்து விட்டார்கள். தோல்வி அடைந்த உடன் சிவாஜி காங்கிரசுக்கு வந்து இருந்தால் உயர்ந்த இடத்துக்கு சென்று இருப்பார் என்றார்கள்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் காங்கிரசுக்கு வந்து மத்திய மந்திரி ஆனார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்தார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் சிவாஜி கணேசன். நிறைய தலைவர்களை உருவாக்கி இருக்கிறார். கட்சி வளர்ச்சிக்காக உழைப்பையும் கொடுத்து இருக்கிறார்.

மிரட்டுகிறார்

தமிழ்நாடு காங்கிரசில் தொண்டர்கள் இருக்கிறார்கள். வழிகாட்டும் தலைவர்கள் சரியில்லை. திருநாவுக்கரசர் என்னை பதவியில் இருந்து எடுத்து விடுவதாக மிரட்டுகிறார். முதல்-அமைச்சர் ஆகும் கனவில் அவர் இருக்கிறார்.

முதல் அமைச்சராக யார் வேண்டுமானாலும் வரலாம். ப.சிதம்பரம், குமரி அனந்தன் உள்பட பல காங்கிரஸ் தலைவர்களுக்கு தகுதி உள்ளது. முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்துக்குத் தான் இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ஆவேன்

எனது மாவட்டத்தில் கட்சிக்கு தொடர்பு இல்லாத, உழைக்காத 13 பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். எனக்கு அரசியலில் ஜூனியராக இருந்த செல்லக்குமார் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக இருக்கும் போது, எனக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகும் தகுதியும், திறமையும் உள்ளது. கடந்த முறை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தபோது, தலைவர் பதவிக்கான பட்டியலில் என் பெயரும் இருந்தது. கட்சியில் விரைவில் மாற்றம் வந்தால் நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆவேன்.

திருநாவுக்கரசர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். எனக்கு தலைவர் ராகுல்காந்தி தான். வழிகாட்டும் தலைவர் ப.சிதம்பரம், உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com