கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் தொல்.திருமாவளவன் பேச்சு

மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க தவறியதே கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சிக்கு காரணம் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் தொல்.திருமாவளவன் பேச்சு
Published on

சென்னை,

அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் முன்னிலை வகித்தனர்.

அம்பேத்கர் சுடர் விருது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை கேரள மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் பெற்றுக்கொண்டார். காமராஜர் கதிர் விருது தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசருக்கும், பெரியார் ஒளி விருது ஆந்திராவை சேர்ந்த கத்தாருக்கும், காயிதே மில்லத் பிறை விருது வைகறை வெளிச்சம் ஆசிரியர் மு.குலாம் முகமதுவுக்கும், செம்மொழி ஞாயிறு விருது வா.மு.சேதுராமனுக்கும் வழங்கப்பட்டது. அயோத்திதாசர் ஆதவன் விருது இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த, மறைந்த அ.சேப்பனுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை அவருடைய மகன் பிரகாஷ் பெற்றுக்கொண்டார். விருதுகளுடன் செப்பு தகடில் பட்டயமும், தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி தொல்.திருமாவளவன் பேசியதாவது.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க போதிய இடங்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட மதசார்பற்ற சக்திகளை காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைக்க தவறியதே இந்த வீழ்ச்சிக்கு காரணம்.

தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைக்கும் இந்த இரு கட்சிகளும் தேர்தலுக்கு முன்னரே இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தால், பா.ஜ.க.வை அதிக இடங்களில் வெற்றி பெறவிடாமல் தடுத்திருக்க முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் கட்சி முயற்சி எடுக்க தவறினால் கர்நாடகா நிலைமைதான் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com