மேகதாது அணை கட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும்.
மேகதாது அணை கட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும்.

கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா, மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணைகட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 1 ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக மேகதாது அணை குறித்து நடைபெற்ற விவாதத்தில் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றது விவசாயிகளுக்கு இழைத்த மாபெரும் துரோகம் ஆகும்.

தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில், இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தினால் பெற்ற உரிமையை காக்க தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

எனவே, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதோடு, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com