

சென்னை,
மத்திய மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெறப்பட்டது. இதற்காக, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் முறையாக விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக்கூறி அவரை தேடப்படும் நபராக அறிவித்து கடந்த ஆண்டு ஜூன் 16 மற்றும் ஜூலை 28-ந் தேதிகளில் இரண்டு லுக்அவுட் நோட்டீசுகளை மத்திய அரசு பிறப்பித்தது.
வெளிநாடு பயணம்
இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, நோட்டீசுக்கு தடை விதித்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.
அதேபோல, விளையாட்டு போட்டிக்காக பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு அனு மதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யும்படி, கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நிபந்தனையுடன் அனுமதி
இதன்படி, கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று உத்தரவு பிறப்பித்தனர். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-
பிப்ரவரி 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், மார்ச் 20-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும் வெளிநாடு செல்ல இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். இதில், பிப்ரவரி மாதம் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குகிறோம். எந்த நாட்டிற்கு எப்போது செல்கிறார்?, எந்த தேதியில் செல்கிறார்?, எப்போது திரும்பி வருவார்? என்பது உள்ளிட்ட பயணத்திட்ட விவரங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கார்த்தி சிதம்பரம் வழங்கவேண்டும்.
திரும்பவேண்டும்
கார்த்தி சிதம்பரம் தன்னுடைய வங்கிக் கணக்குகளை பயன்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். அந்த கணக்குகளை மூடக்கூடாது. மேலும், அவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, வருகிற 28-ந்தேதிக்குள் நாடு திரும்பி விடவேண்டும்.
தேடப்படும் நபராக அறிவித்த நோட்டீசை எதிர்த்து அவர் தொடர்ந்துள்ள வழக்கு வருகிற மார்ச் 12-ந்தேதி விசாரணைக்கு வருகிறது என்பதால், மார்ச் மாதம் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குவது குறித்து இப்போது எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க விரும்பவில்லை.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.