

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி கிராமத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து 6 வாரம் வந்து சாமி தரிசனம் செய்து விளக்கு ஏற்றினால் பக்தர்களின் வேண்டிய வரமான வீடுமனை, தொழில், திருமணம், உத்தியோகங்களில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலிக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் சன்னிதி, அண்ணாமலையார் சன்னிதி உள்ளிட்ட சன்னிதிகள் புதுப்பித்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக திருக்குளம் பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் நேற்று கார்த்திகை தீபம் என்பதால் விடியற்காலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில், நெய்தவாயல் அக்னீஸ்வரர், நாலூர் நாகவல்லிஸ்வரர், திருவெள்ளைவாயல் திருவெண்ணீஸ்வரர், காளாஞ்சி சிந்தாமணிஸ்வரர், வேலூர் நிரஞ்சனீஸ்வரர், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர், அரசூர் திருவாலீஸ்வரர், சின்னக்காவனம் நூற்றெட்டீஸ்வரர், பொன்னேரி கும்மினிமங்கலம் அகத்தீஸ்வரர், ஞாயிறு புஷ்பதீஸ்வரர், பஞ்செட்டி அகத்தீஸ்வரர் ஆகிய கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது.