கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது..!

திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளை செய்வதற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது..!
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 'மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் 26-ந் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கேவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் தேரடி முனீஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்களுக்கு முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பூர்வாங்க பணிகளை செய்வதற்கான பந்தக்கால் நடப்பட்டது. இதில் கலெக்டர் பா.முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com