அண்ணா நினைவிடம் அருகே அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்

அண்ணா நினைவிடம் அருகே அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. #MarinaBeach #Karunanidhi #KarunanidhiRIP
அண்ணா நினைவிடம் அருகே அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்
Published on

சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் அஞ்சலிக்காக கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி இல்லத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உடல், அதிகாலை 5 மணியளவில், பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, திமுக தொண்டர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். தங்கள் தலைவருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்த குவிந்து இருந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தேசியத் தலைவர்கள், தமிழகத்தில் உள்ள தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும், இரங்கலும் தெரிவித்தனர். தனிவிமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, அங்கிருந்து மீண்டும் டெல்லி புறப்பட்டார். முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நண்பகல் 2 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமானம் மூலம் சென்னை வந்தார். சிறப்பு வாகனம் மூலம் ராஜாஜி அரங்குக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கருணாநிதி குடும்பத்தாருக்கும் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், லாலுபிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், மனோஜ் குமார் ஆகியோர் ராஜாஜி அரங்குக்கு வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரும் நேரில் வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ராஜாஜி அரங்குக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இறுதி ஊர்வலம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் துவங்கியது. முப்படை வீரர்கள் அவரது உடலை அலங்கரிக்கப்பட்ட ராணுவ வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அண்ணாசாலை, வலாஜா சாலை வழியாக, கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள், தொண்டர்கள் கண்ணீர் கடலில் மிதந்தபடி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினாவுக்கு சென்றது. வழியெங்கும் வாழ்த்து முழக்கங்களை இட்ட படி, கண்ணீருடன் திமுக தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியை சுமந்து செல்லும் வாகனத்திற்கு பின்னால் ஸ்டாலின் நடந்து சென்றார். மாலை 6.15 மணியளவில், கருணாநிதியின் உடலை சுமந்து வந்த ராணுவ வாகனம் அண்ணா நினைவிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து, மெரினாவில் காத்திருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, உள்பட தேசிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

கருணாநிதியின் உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசியக்கொடியை முப்படை வீரர்கள் எடுத்து, அவரது மகன் ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, கருணாநிதியின் மகன் மு.க அழகிரி உட்பட குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க, கருணாநிதியின் உடலுக்கு இறுதி மலரஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகனும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அரசு மரியதையுடன் நல்லடக்கம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது. "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஒய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் சந்தன பேழையிலும், உடல் அடக்கம் செய்யும் இடத்திலும் எழுத வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி விரும்பினார் அதுபோல் சந்தனபேழையில் எழுதப்பட்டு உள்ளது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தொண்டர்கள் கோஷங்கள் விண்ணைப்பிளந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com