கருணாநிதி நலமுடன் இருக்கிறார் - ஆ. ராசா

திடீரென்று ஏற்பட்ட ரத்த அழுத்த குறைபாடு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும் ஆ. ராசா தெரிவித்துள்ளார். #Karunanidhi
கருணாநிதி நலமுடன் இருக்கிறார் - ஆ. ராசா
Published on

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வந்தார்.

இந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்திற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் கருணாநிதியின் தனிமருத்துவர் கோபால் உள்பட 2 மருத்துவர்கள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் சில மருத்துவர்களும் வந்தனர். இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து அவசர ஆம்புலன்ஸ் வாகனம் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தது. தொடர் சிகிச்சைக்காக கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் அவருடன் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

பின்னர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வந்துள்ளார். அங்கு திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, திடீரென்று ஏற்பட்ட ரத்த அழுத்த குறைபாடு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது 20 நிமிட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com