

சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தலைவர் கருணாநிதி மறைந்தாலும் அவர் கட்டிக்காத்த இயக்கமும், அதன் கொள்கைகளும், அவர் உருவாக்கித்தந்த திட்டங்களின் பலன்களும், சட்டங்களின் விளைவுகளும் சாதனை வைரங்களாக சதா ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வைரங்களை மணிமுடியில் பதிப்பதுபோல அதன் பெருமை உலகுக்கெல்லாம் தெரிவதுபோல டிசம்பர் 16-ந் தேதி தி.மு.க.வின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் தனது ஆருயிர் தலைவர் அண்ணாவின் அருகில், சிலையாக எழுகிறார் தலைவர் கருணாநிதி. சிற்பி தீனதயாளனும், அவர்தம் குழுவினரும் ஓயாது உழைத்து உருவாக்கியுள்ள உயிர்த்துடிப்புமிக்க சிலை.
எந்த தொண்டர்களால் இந்த கழகம் வலிமையுடன் இருக்கிறதோ, அந்த தொண்டர்களை எந்த அறிவாலயத்தில் தலைவர் கருணாநிதி நாள்தோறும் சந்தித்து அகம்மிக மகிழ்வாரோ அதே அறிவாலயத்தில் தொண்டர்களை காண்பதற்கு உருவசிலையாக எழுந்து நிற்கிறார். எந்த தலைவரை கண்டால் தங்கள் உள்ளம் மகிழுமோ, உணர்வு பெருகுமோ அந்த தலைவரை உருவச்சிலை வடிவில் காண ஒரு கோடி தொண்டர்கள் பேரார்வத்துடன் இருக்கிறார்கள்.
உயிர்த்துடிப்புடன் வடிக்கப்பட்டிருக்கும் அந்த சிலையில் இருந்து தன் கரகரப்பான காந்தக் குரலால், என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பே, ஓடிவா, கழகத்தின் பெருமையை நாடே எடுத்துரைக்கும் வகையில் நல்லுள்ளம் கொண்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ள விழாவிற்கு திரண்டுவா எனத் தலைவர் கருணாநிதியே அழைப்பதாக கருதி, ஒவ்வொரு மாவட்டம் - ஒன்றியம் - நகரம் - பேரூர் - சிற்றூர் கழகங்களில் இருந்து தொண்டர்கள் சென்னை நோக்கி வருவதற்கு ஆயத்தமாகிவிட்டனர்.
உங்களில் ஒருவனான நான் உங்களின் பேரார்வத்தை மதிக்கிறேன், போற்றுகிறேன், வணங்குகிறேன். பெருமைமிகு உருவச்சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தியுடன், ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும், கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும், புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமியும் பங்கேற்று இந்திய அரசியலின் வழிகாட்டியாக விளங்கிய வரலாற்று நாயகர் நம் தலைவருக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.
பல மாநிலங்களில் இருந்தும் வரும் தலைவர்களுடன் தமிழ்நாட்டில் நம் தோழமை கட்சியின் தலைவர்கள் - நிர்வாகிகள், பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையினர், பலதுறை அறிஞர் பெருமக்கள், சான்றோர் என தலைவர் கருணாநிதியின் மீது பேரன்பு கொண்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் உருவச்சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்தான், டிசம்பர் 16-ந் தேதி மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவிருக்கிறது.
தி.மு.க. தொண்டர்கள் யாவரும் ஆர்வமிகுதியால் அறிவாலயம் முன்பு கூடுவதை தவிர்த்து, ஒய்.எம்.சி.ஏ. திடலில் அணி அணியாய்த் திரள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, தலைவர் கருணாநிதி கட்டிக்காத்த மதசார்பற்ற, முற்போக்கு, சமூகநீதி, ஜனநாயக கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும்.
அந்த வெற்றியை நம்மைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் மனநிலை அறிந்த மாற்றுக்கட்சியினரும் அதனை உணரத் தொடங்கியிருப்பதால்தான் கொள்ளைக் கூட்டத்தாரிடம் இருந்து தப்பிவந்து, கொள்கைக் கோட்டையாம் தி.மு.க.வில் தங்களை ஒப்படைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
தி.மு.க.வின் வெற்றி என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுவிட்டது. அதனை எடுத்து பதிக்கின்ற பணிதான் தேர்தல் களம். அதற்கேற்ப பொறுப்புணர்ந்து கட்டுப்பாடு காத்து, ஓயாது உழைத்திட வேண்டும். அதுவே உருவச்சிலையாக உயர்ந்து நிற்கும் தலைவர் கருணாநிதிக்கு நாம் செய்யும் தொண்டு, காட்டுகின்ற நன்றி, செலுத்துகின்ற காணிக்கை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.