கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மரணம் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் நேற்று மரணம் அடைந்தார். மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருடைய உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மரணம் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Published on

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன் (வயது 80). வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் இருந்து சண்முகநாதனின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

கண்ணீர் சிந்திய மு.க.ஸ்டாலின்

அவருடைய உடலுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாளாமல் மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார். சண்முகநாதனின் உறவினர்களின் கைகளை பற்றிக்கொண்டு மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் வெகு நேரமாக சோகத்துடன் மு.க.ஸ்டாலின் அங்கேயே உட்கார்ந்திருந்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் உள்பட தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

அமைச்சர்கள் க.பொன்முடி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், தலைமை செயலாளர் இறையன்பு, தயாநிதிமாறன் எம்.பி.,ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஜெகத்ரட்சகன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., நக்கீரன் கோபால், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் சண்முகநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுருக்கெழுத்து நிருபர்

தமிழக போலீசில் தமிழ் சுருக்கெழுத்து நிருபராக தனது ஆரம்ப கால பணியை தொடங்கியவர் சண்முகநாதன்.

அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு சென்று எதிர்க்கட்சி தலைவர்களின் மேடை பேச்சுகளை சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை அதிகாரிகளுக்கு தட்டச்சு செய்து அனுப்பும் வேலையை செய்து வந்தார். 1967-ம் ஆண்டு அண்ணாவின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்தபோது, போலீஸ் பணியில் இருந்து தமிழக சட்டமன்ற மேலவையில் தமிழ் சுருக்கெழுத்தாளராக தனது பணியை சண்முகநாதன் மாற்றிக்கொண்டார்.

கருணாநிதியின் நிழல்

பின்னர், 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி அண்ணா மறைந்ததையடுத்து, முதல்-அமைச்சராக தேர்வான கருணாநிதி, குறிப்பு எடுக்கும் திறமையை பார்த்து சண்முகநாதனை தனது தனிப்பட்ட உதவியாளராக நியமித்தார். அப்போது முதல், கருணாநிதியின் மறைவு வரை சுமார் 48 ஆண்டுகள் அவருடனேயே அவரது நிழலாக வலம் வந்தார் சண்முகநாதன். கருணாநிதியின் எண்ணங்களை உள்வாங்கிக்கொண்டு, அவருடைய கண் அசைவுகளுக்கு ஏற்ப செயலாற்றியவர்.

சண்முகநாதனுக்கு யோகாம்பாள் என்ற மனைவியும் அருண்குமார், பாலாஜி என்ற 2 மகன்களும், மதுமதி என்ற மகளும் உள்ளனர்.

இன்று உடல் தகனம்

சண்முகநாதனின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com