தஞ்சையில் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை திறப்பு

தஞ்சையில் 2¼ கி.மீ. தூரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ சென்று மக்களை சந்தித்தார்.
தஞ்சை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாள் சுற்றுப்பயணமாக தஞ்சைக்கு நேற்று சென்றார்.
முதலில் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு அவர் தண்ணீர் திறந்து விட்டார்.
காவிரியில் 40 ஷட்டர்கள், வெண்ணாற்றில் 33, கொள்ளிடத்தில் 30, கல்லணைக்கால்வாயில் 6, மணற்போக்கியில் 5, கோவிலடி மற்றும் பிள்ளைவாய்க்காலில் தலா ஒரு ஷட்டர்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டது.
இதன்படி முதற்கட்டமாக காவிரியில் 1,500 கன அடி, வெண்ணாற்றில் 1,500 கன அடி, கல்லணை கால்வாயில் 500 கன அடி, கொள்ளிடத்தில் 400 கன அடி என தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் கூடுதலாக கிடைக்க உள்ள தண்ணீரை தேவைக்கேற்ப அனைத்து ஆறுகளிலும் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா 13 லட்சம் ஏக்கரில் பாசன வசதி பெற உள்ளது. மேலும் கல்லணை தலைப்பில் தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய்களின் கடைமடை பகுதிகளுக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
முன்னதாக கல்லணை சுற்றுலா மாளிகையில் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் ஆய்வு நடத்தினார். அப்போது டெல்டா பகுதிகளில் தூர்வாரப்பட்டதன் விவரங்கள், சாகுபடி விவரங்களை கேட்டறிந்ததோடு, தேவைக்கேற்ப நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்திடவும், விவசாய இடுபொருட்களான உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்திடவும் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து டெல்டா விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து தண்ணீர் திறந்துவிட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் குறித்த மனுவையும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர் தஞ்சை ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து 'ரோடு ஷோ' சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த தி.மு.க.வினரும், பொதுமக்களும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர்கள் கொடுத்த மனுக்களையும் பெற்று கொண்டார். மாணவ, மாணவிகள் பலர் கைகுலுக்கவும், 'செல்பி' எடுக்கவும் ஆர்வப்பட்டனர்.
இவர்களது ஆர்வத்தை பார்த்த மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்ததுடன், 'செல்பி'யும் எடுத்துக் கொண்டார். தஞ்சை ரெயிலடி பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுமி ஒருவர் பூவை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தார்.
இதை பார்த்த முதல்-அமைச்சர் நேராக சென்று அந்த சிறுமியிடம் இருந்து பூவை மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார். தொடர்ந்து காந்திஜி சாலையில் நடந்தே சென்று சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலர் தாங்கள் பெற்ற பரிசுகளுடன் சாலையோரம் காத்திருந்தனர். இதை பார்த்த மு.க.ஸ்டாலின் பரிசுகளை பார்வையிட்டு, வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தஞ்சை ராமநாதன் ரவுண்டானா, மேரீஸ்கார்னர், ரெயிலடி, காந்திஜிசாலை வழியாக 2¼ கி.மீ. தூரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ' சென்று மக்களை சந்தித்தார்.
அதனைத்தொடர்ந்து தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார்.
விழாவுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிலைக்கு முன்பு நின்று கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையில் உள்ள கல்வெட்டில், கருணாநிதி தொண்டர்களுக்கு அளித்த 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன. அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி ஆகிய முழக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
விழாவில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
பிரமாண்ட கருணாநிதி சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். தி.மு.க. தொண்டர்கள் சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.






