

கரூர்,
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கழுகூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது 34). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் 2-வது மகன் சஞ்சீவ்(3) விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது வீட்டில் நின்ற காருக்குள் சென்று, காரின் கதவை சாத்தியதாக தெரிகிறது. அப்போது கார் கதவு 'லாக்' ஆகியதால் சிறுவன் வெளியே வரமுடியாமல் மயங்கி விழுந்தான். இந்த நிலையில் சஞ்சீவை காணவில்லை என அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் அவனை தேடி பார்த்தனர். ஆனால் அவன் எங்கும் கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவனது பெற்றோர் வீட்டில் நிறுத்தி இருந்த காரின் கதவை திறந்து பார்த்தனர். அங்கு சஞ்சீவ் மயங்கிய நிலையில் காரின் இருக்கையில் கிடந்தான். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், அவனை மீட்டு சிகிச்சைக்காக தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சஞ்சீவ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது அவனது உடலை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கண்போரை கண்கலங்க வைத்தது.
இதுகுறித்து தகவலறிந்த தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சஞ்சீவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 3 வயது சிறுவன் காருக்குள் மூச்சு திணறி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.