கரூர் நகரப்பகுதியில் நுங்கு விற்பனை மும்முரம்

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க கரூர் நகரப்பகுதியில் நுங்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
கரூர் நகரப்பகுதியில் நுங்கு விற்பனை மும்முரம்
Published on

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

கரூர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், மதிய நேரங்களில் வெளியில் செல்பவர்கள் குடை பிடித்தபடியும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும், இளைஞர்கள் தொப்பி அணிந்தும் சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

நுங்கு விற்பனை அமோகம்

வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை காத்துக்கொள்ள பொதுமக்கள் குளிர்பானங்கள், மோர், பழரசம், இளநீர் வாங்கி அருந்துகின்றனர். இதனால், இந்த கடைகளில் கூட்டம் அதிகரிப்பதுடன் விற்பனையும் அமோகமாக இருக்கிறது. இதேபோல, வெயிலில் இருந்து உடல் சூட்டை தணிக்கும் நுங்கு விற்பனையும் அமோகமாக இருக்கிறது. கரூர் நகரில் 5 ரோடு, லைட் ஹவுஸ், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நிறைய வியாபாரிகள் நுங்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதில், பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால் பொதுமக்கள் நுங்கு வியாபாரிகளை தேடி வந்து வாங்கி செல்கின்றனர்.

நலவாரியம் வேண்டும்

இதுகுறித்து நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து நுங்கை வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறோம். ரூ.100-க்கு 10 நுங்கும், தண்ணீர் நுங்கு ஒன்று ரூ.10-க்கும் விற்பனை செய்து வருகிறோம்.இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கின்றனர்.

இருப்பினும் நுங்கு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு எங்களுக்கு காப்பீடு வசதி செய்து தர வேண்டும். பனைமரம் ஏறும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com