தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனு; கரூர் நீதிமன்றம் தள்ளுபடி

கரூர் சம்பவம் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ஜாமீன் கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனு; கரூர் நீதிமன்றம் தள்ளுபடி
Published on

கரூர்,

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27ம் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்.பி. , டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கொலைக்குச் சமமான குற்றப்பிரிவு 105, குற்றமற்ற கொலை செய்ய முயற்சி செய்தல் பிரிவு 110, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தும் அலட்சிய போக்குடன் நடந்துகொள்ளும் குற்றப்பிரிவு 125பி, பொது அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் இருத்தல் குற்றப்பிரிவு 223, பொது சொத்துக்கு சேத விளைவித்தல் குற்றப்பிரிவு டிஎன்பிபிடிஐ ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 28-ம்தேதி கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கட்சியின் மாநகரச் செயலாளர் மாசி பவுன் ராஜ் வீட்டில் தங்கியிருந்தபோது, அவரையும், அவருக்கு உதவிய பவுன் ராஜையும் கடந்த மாதம் 29-ம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை (அக். 6-ம்தேதி) மாசி பவுன்ராஜ் சார்பில் ஜாமீன் மனு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன், கரூர் சம்பவம் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், பவுன் ராஜுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே கரூர் த.வெ.க. கூட்டத்தில் நெரிசலில் சிக்கியவர்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸின் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில், சேலத்தைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினரான மணிகண்டன், கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் கோரி இருந்தார். இந்தநிலையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com