கரூர் கூட்ட நெரிசல்: விஜய்யிடம் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை

காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
கரூர் கூட்ட நெரிசல்: விஜய்யிடம் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை
Published on

புதுடெல்லி,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

சம்பவத்துக்கு காரணம், பாதுகாப்பு குறைபாடுகள் என த.வெ.க. தரப்பில் சொல்லப்பட்டதால் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து, கட்சியின் தலைவரான விஜய்க்கும் 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையில் கடந்த 10-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் விஜய் தரப்பில், டெல்லிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதுகுறித்த பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடத்துமாறும் விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விஜய்யை 15-ந்தேதி விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு சம்மன் அனுப்பினர்.

இதன்படி, சி.பி.ஐ. விசாரணைக்காக நேற்றைய தினம் தனி விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் 7 பேர் சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் விஜய், இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை ஓட்டலில் இருந்து புறப்பட்டு, சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட விசாரணையின்போது கோரப்பட்ட ஆவணங்கள் இந்த விசாரணையின்போது, விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தேவைப்பட்டால் விசாரணை மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் வரை நீடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணையை பொறுத்தே சென்னைக்கு விஜய் எப்போது திரும்புவார் என்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com